இசை ஊழியங்கள்
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று சங்கீதக்காரனாகிய தாவீது கர்த்தரைத் துதித்தான். துதிக்கு பாத்திரர் கர்த்தர் (2சாமு 22:4) என்றும், கர்த்தாவே ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுவேன் (2சாமு 22:50) என்று சொல்லித் துதித்த தாவீதும், அவனுடைய மகனாகிய சாலமோனும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து (1நாளா 6:32,33) கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசாரிப்புக் கூடார வாசலுக்கு முன் சங்கீத சேனையுடன் பணிவிடை செய்ய மனுஷரை ஏற்படுத்தினான். தாவீது ராஜா தன் காலத்தில் (1நாளா 6:31) கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவை நடத்த மனுஷரை ஸ்தாபித்தான்.
தற்காலத்தில் பாடகர் குழு, ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்த முற்பிதாக்களின் முறைமையே என்றால் மிகையாகாது. (1 நாளா 9:33) லேவியின் புத்திரராகிய சங்கீதக்காரர், இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்த வேண்டியதாயிருந்தது. பாடகர்கள் மாத்திரமல்ல, ஆலயத்தில் பயன்படுத்த வாத்தியக் கருவிகளும் சாலமோன் ராஜாவால் செய்யப்பட்டது. (1ராஜா 10:22, 2நாளா 7:11). சாலமோன் ஓப்பிரிலிருந்து வந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீதகாரருக்கு சுரமண்டலங்களையும், தம்புருக்களையும் உண்டாக்கினான். பாடகர்கள் ஆலயத்தில் இடைவிடாமல் பாடிக் கொண்டிருந்தார்கள். லேவியரான பாடகர்கள் மெல்லிய புடவை தரித்து கைத்தாளம், தம்புரு மற்றும் சுரமண்டலத்தைப் பிடித்து பலிபீடத்திற்கு கிழக்கே (2நாள 5:12, 13) தங்கள் இருப்பிடத்தில் அமர்ந்து, ஒருமிக்க பூரிகைகளை ஊதி, ஏக சத்தமாய் கர்த்தரைத் துதித்தார்கள்
தேவாலயம் மேகத்தால் நிறையப்பட்டது. பாடகர்கள் (1நாள 15:16,19) கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி சந்தோஷமுண்டாக பாடினார்கள். மேலும், பஞ்சலோக கைத்தாளங்களை தொனிக்கப்பண்ணி பாடினார்கள். தற்காலத்தில், தேவனுடைய மகிமை ஆராதிக்கும்பொழுது நம்மை நிரப்ப, நாம் கைத்தாளம் மற்றும் வாத்தியக் கருவிகள் மீட்டி கர்த்தரைப் பாடித் துதிக்கிறோம்.
வாத்தியக் கருவிகளை (2நாளா 20:28) இசைத்து ஆலயத்துக்கு வந்தார்கள். ஆசாபின் புத்திரர் (2நாளா 35:15) பாடகர்கள். அவர்கள் தங்கள் ஸ்தானத்தில் பாடுவார்கள். ஆலயத்தில் பாடகர்கள் இருக்கிற அறை உண்டு (நெகே 10:39). பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் (நெகே 12:28 29) கட்டியிருந்தார்கள்.
யோசபாத் ராஜா (2நாளா 20: 19, 21) யுத்தத்திற்கு புறப்பட்டு செல்லும் போது ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக பாடகர்களை நிறுத்தினான். அவர்கள் பாடி துதி செய்யத் துவங்கின போது கர்த்தர் எதிரிகளை ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பப் பண்ணினார். எதிரிகளை துரத்த சிறந்த ஆயுதம் துதி. தேவனைத் துதிக்க சங்கீதங்கள் (நெகே 12:46) திட்டம் பண்ணப்பட்டிருந்தது. பாடுகிற, தம்புரு, வீணை வாசிக்கிற (சங் 68:25) கன்னிகைகள் இருந்தார்கள்.
தற்காலத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாடகர் குழு, மேற்கூறிய அத்தனை விளக்கங்களுடன் ஒத்திருப்பதை காணலாம். பத்மு தீவில் வெளிப்பாடு பெற்ற யோவான் (வெளி 15:2 3) ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலத்தைப் பிடித்துக் கொண்டு, கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும், அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும், பாடி தேவனைத் துதித்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும்; ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள் (கொலோ 3:16).